Saturday, June 2, 2012

ஜாமிஆ அல்-கரவிய்யீன்

உலக முஸ்லிம்களின் இன்றைய கல்வி நிலை:

உலக மக்கள் தொகை ஏறக்குறைய 670 கோடி.
முஸ்லிம் நாடுகளின் எண்ணிக்கை 57. ஒட்டு
மொத்த முஸ்லிம்களின் எண்ணிக்கை ஏறக்குறைய 170 கோடி.

கல்வியறிவு:

யூதர்களின் கல்வியறிவு வீதம் 100%
கிறிஸ்தவர்களின் கல்வியறிவு வீதம் 90%
முஸ்லிம்களின் கல்வியறிவு வீதம் 60%

இதில் உயர்கல்வி வரை பயிலும் முஸ்லிம்களின் வீதம் வெறும் 2% மட்டுமே.
57 முஸ்லிம் நாடுகளிலும் உள்ள உயர் கல்வி நிறுவனங்கள் அல்லது பல்கலை கழகத்தின் எண்ணிக்கை 500 ஆகும். இதை அமெரிக்காவோடும் இந்தியாவோடும் ஒப்பீட்டு பார்த்தால்,

அமெரிக்காவில் 6000 உயர் கல்வி நிறுவனங்களும் இந்தியாவில் 8000 மும் இருக்கிறது.

அடுத்து, உயர் கல்வி நிறுவனங்களின் தரத்தின் அடிப்படையில் பார்த்தால், உலக அளவில் எடுத்துக்கொண்ட ஆய்வின் படி முதல் 250 கல்வி நிறுவனங்களில் ஒன்று கூட முஸ்லிம் நாடுகளில் இல்லை என்பது பரிதாபகரமான ஒன்று.

ஏன் உலக முஸ்லிம் சமூகம் கல்வியில் பின் தங்கி இருக்கிறது என்பது பற்றி ஒவ்வொரு முஸ்லிமும் சிந்திக்க கடமைப்பட்டிருக்கிறோம். ஏனென்றால் வரலாற்றை பின்னோக்கி பார்க்கும் போது, எந்தவொரு சித்தாந்தமோ எந்தவொரு மதமோ இஸ்லாத்தை போல விரைவாக மக்களை சென்றடையவில்லை. இஸ்லாம் வேகமாக வளர்ந்த மார்க்கம். கற்பதும் கற்பிப்பதும் முஸ்லிம்களுக்கு இபாததின் ஒரு வகையாக இருக்கும் போது எப்படி வந்தது இந்த தொய்வு? சிந்திக்க வேண்டும்.

குர்-ஆன் பல இடங்களில் மனிதர்களை சிந்திக்க சொல்கிறது. இஸ்லாத்தை ஏற்ற முஸ்லிம்களும் சிந்தித்தார்கள். அதனால் தான் கி.பி. 700 முதல் கி.பி. 1250 வரை முஸ்லிம்கள் கல்வியில் கோலோச்சினர். மருத்துவம்; வேதியியல், புவியியல், வானியல்,இயற்பியல் என்று எல்லா துறைகளிலும் பங்களிப்பை முஸ்லிம்கள் வழங்கியுள்ளனர்.

ஒன்பதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில், இப்போது துனிஷியா எனப்படும் நாட்டின் கைரவான் பகுதியிலிருந்து மொரோக்கோ தேசத்தின் "பிஸ்" நகரின் மேற்கு பகுதியில் இருக்கும் கைரவான் குடியேற்றவாசிகள் வசித்த பகுதிக்கு முஹம்மத் அல்-பிஹ்ரி என்ற செல்வந்தரின் ஒரு குடும்பம் இடம் பெயர்ந்தது. அவருக்கு பாத்திமா , மர்யம் என்று இரு புதல்விகள்.

அவ்விரு புதல்விகளும் தனது தந்தையின் சொத்திலிருந்து பெருமதியான பணத்தினை வாரிசுரிமையாக பெற்றனர். இதில் பாத்திமா அல்-பிஹ்ரி என்ற அந்த பெண்ணிற்கு ஒரு எண்ணம் தோன்றியது, தந்தை தமக்கு வழங்கியுள்ள அந்த செல்வத்தை தனது சமூகத்திற்கு பயன்படும் வகையில் ஒரு மதரஸா துவங்க வேண்டும் என்று எண்ணினார்.

அதுபோல பள்ளிவாசலுடன் இணைந்த மதரஸா துவங்கப்பட்டது.
கி.பி.859 ல் பாத்திமா அல்-பிஹ்ரி என்பவரால் அல்-கராவீன் ( ஜமியத்துல் கராவீன்) என்று அவர்களின் துனிஷிய பூர்வீக ஊரின் பெயர் கொண்டு ஆரம்பிக்கப்பட்டது. தொழுகைக்கான இடமாகவும், அரசியல் கலந்துரையாடல்கள் நடைபெரும் இடமாகவும் விளங்கியதுடன், ஐரோப்பாவிற்கும் முஸ்லிம் சமூகத்திற்கும் பண்பாட்டு தொடற்பினை பேண, காரணியாகவும் இருந்து வந்துள்ளது.

அதன் பின்னர் வந்த ஆட்சியாளர்களால் இந்த மதரஸா படிப்படியாக வளர்ச்சி பெற்று வந்துள்ளது. ஜமியத்துல் கராவீன் அடுத்தடுத்து வந்த ஆட்சியாளர்களால் படிப்படியாக விரிவுபடுத்தப்பட்டு 20000 பேர்கள் ஒரேநேரத்தில் தொழும் வகையில் கட்டமைக்கப்பட்டது.

1349- ல் அபு இனான் பாரிஸி என்பவரால் தொடங்கப்பட்ட இதன் நூலகம் பல அரிய கையெழுத்துப் பிரதிகளை கொண்டுள்ளது.

1957-ல் புனரமைக்கப்பட்ட இந்த மதரஸா இன்றளவும் பெரிய வளர்ச்சி பெற்று "அல்-கராவீன் பல்கலைகழகமாக" செயல்பட்டு வருகிறது. கின்னஸ் புத்தகத்தில் "பல்கலை கழக மட்டத்தில், பட்டங்கள் வழங்குவதில் பழங்காலமாக தொடர்ச்சியாக இயங்கி வருவனவற்றில் இந்த பல்கலைகழமே பழமையானது" என்று குறிப்பிடப்பட்டுள்ளது.



உலகில் இன்று இருக்கும் பாரம்பரியமான பல்கலைகழகங்களில் அல் கரவிய்யீன் முக்கியதுவம் வாய்ந்ததாக திகழ்ந்து வருகிறது. இதற்கு முன்பும் உலகத்தில் சில பல்கலைகழகங்கள் புகழ் பெற்று இருந்தாலும், அவைகள் பட்டங்கள் வழங்கியதில்லை. உலகில் முதன்முதலில் பட்டம் வழங்கி மாணவர்களுக்கு சான்றிதழ் கொடுத்தது இதுவே என்கிறார்கள்.

"கல்வி கற்பது ஆண்-பெண் இரு பாலாருக்கும் கடமை" என்கிறது இஸ்லாம்.